காணாமல்போனவர்களின் தகவல்கள் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்கள் சிலவேளைகளில் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது உயிருடன் இருப்பவர்கள் மத்தியில் அவர்கள் இல்லாமல் இருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பதானது,காணாமல்போனவர்கள் தமிழர்கள் என்றபடியால் அவர்கள் குறித்து சிங்கள ஆட்சியாளர்கள் கரிசனையோ அல்லது கழிவிரக்கமோ கொள்ளமாட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமல்போனவர்கள் இறந்து விட்டனர் எனத் தெரிவித்திருந்தார்.
பிரதமரின் இக்கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இப்போது அதே பிரதமர் ரணில், காணாமல்போனவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
காணாமல்போன பிள்ளைகளின் பெற்றோர்களும் உறவுகளும் தங்கள் பிள்ளைகளை நினைத்து அன்னம் ஆகாரம் எதுவுமின்றி கண்ணீரும் கம்பலையுமாக அலைகின்றனர்.
யார் வந்தாலும் அவர்களின் கால்களில் விழுந்து ஐயா! காணாமல்போன எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என்று கெஞ்சுகின்றனர்.
நிலைமை இதுவாக இருக்கையில், காணாமல் போனவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதானது தமிழினம் குறித்த வக்கிரத்தனம் இன்னமும் சிங்கள ஆட்சியா ளர்களிடம் இருந்து அகலவில்லை என்பதையே சுட்டி நிற்கிறது.
காணாமல்போனவர்களின் உறவுகளின் வாழ்வு என்பது தங்கள் பிள்ளைகளைத் தேடுவது என்றாகிவிட்டது.எனினும் அவர்களின் வேதனையைப் புரிந்து கொள்வதற்கு யாரும் இல்லை என்று கூறுவதே பொருத்துடையதாகும்.
அதிலும் குறிப்பாக காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு ஆதரவாக அவர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களைச் செய்யவோ அல்லது அகிம்சை வழிப் போராட்டங்களை நடத்தவோ தமிழ் மக்களும் தயார் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் காணாமல்போனவர்களைத் தேடுகின்றபடலம்; துன்பத்தின் வலியைச் சுமந்து நிற்கும் உறவுகளுக்கு மட்டுமே என்றாகிவிட்டது.
நிலைமை இதுவாக இருக்கையில், காணாமல்போனவர்கள் தொடர்பில் கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் காணாமல்போனவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என எந்தக் கலக்கமும் தயக்கமும் இன்றிக் கூறியுள்ளார் எனில்,தமிழ் மக்களின் நிலைமை எவ்வாறாக அமையப் போகிறது என்பதைப் புரிந்து கொள்வதில் அதிக கடினம் இருக்க முடியாது.
பிரதமர் ரணில் இவ்வாறு கூறியபின்னரும் எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நல்லாட்சி எல்லாம் தரும் என்று நம்புகிறார் என்றால், தமிழனின் பாழாய்ப் போன தலைவிதியை நினைந்து அழுவதைவிட வேறு என்னதான் நாம் செய்ய முடியும்.