இலங்கையில் முதலீடு செய்வதற்கு எங்களுக்கு மட்டும் அனுமதி தாருங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததில்லை என சீன அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Hua Chunying,
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் சீன நிறுவனங்களின் முயற்சியாண்மை மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கையிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கோரியதில்லை.
இந்நிலையில் முதலீட்டு வலயத்திற்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் சிறியளவில் போராட்டமொன்று நடத்தப்பட்டதாகவும் அது, பிழையான புரிதல் காரணமாக ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை அபிவிருத்தித் திட்டம் குறித்து போதியளவு தெளிவற்ற காரணத்தினால் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கைக்கு உச்ச அளவில் உதவிகளை வழங்கவே சீனா விரும்புகின்றது என்றார்.
இந்த மாத தொடக்கத்தில் சீனாவிற்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மகிந்த தரப்பினர் தான் முன்னின்று ஏற்பாடு செய்தனர் என அண்மையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.