மான் இயற்கை காரணத்தால் இறந்ததாகவும் தான் சுட்டுக் கொல்லவில்லை என்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஹம் சாத் சாத் ஹைன் படத்தில் நடித்தபோது 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொலிவுட் நடிகர் சல்மான் கான் மானை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நீதிமன்றத்தில் 19 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் பாலிவுட் நடிகர் சயிப் அலி கான், நடிகைகள் நீலம், சோனாலி பெந்த்ரே, தபு உள்ளிட்டோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். நீதிபதி சல்மான் கானிடம் 65 கேள்விகள் கேட்டார். அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு தவறு என சல்மான் பதில் அளித்துள்ளார்.
அந்த வகையில் மானை தான் சுட்டுக்கொல்லவில்லை அது இயற்கை காரணத்தால் இறந்துவிட்டது. இதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று சல்மான் கான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.இதேவேளை உங்கள் ஜீப்பில் ரத்தக் கறை இருந்ததும், வாகனத்தில் மானின் முடி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதே என நீதிபதி கேட்டார்.
அதற்கு சல்மான் கான், அதில் உண்மை இல்லை என்று கூறிவிட்டார். துப்பாக்கி உரிமம் காலம் முடிந்தும் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஆதாரம் இல்லை என்று கூறி ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான் கானை கடந்த 18ம் தேதி விடுவித்தது. முன்னதாக மும்பையில் குடிபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கிலும் சல்மான் கான் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.