மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக பலர் ஊடுருவுவதை தடுக்க எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.
அதன்படி தற்போது ஜனாதிபதியாக பதவி பொறுப்பேற்றுள்ள தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அதற்கான நிதியினை மெக்ஸிகோவிடம் இருந்தும் வசூலிக்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு மெக்ஸிகோ தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
எல்லைச் சுவர் கட்ட மெக்ஸிகோ நிதி வழங்க மறுத்த நிலையில், அத்தொகையை வேறு வழியில் வசூலிக்கும் முகமாகவே இறக்குமதி வரியை அறிமுகப்படுத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் எல்லை சுவர் கட்ட ஆண்டுக்கு 10 மில்லியன் டொலர் பணத்தை மிக எளிதாக பெற முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.