“சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு” என்று ஔவையார் பாடிய விநாயகர் அகவலைச் சீர்காழி கோவிந்தராஜன் பாடக் கேட்டிருப்பீர்கள். தித்திக்கும் தேவகானம் அது. இந்த அகவலில் சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்கு மிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே ஔவையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, தலையாட்டிக் கேட்ட பாடல் இது.
திருமாக்கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர். ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து, கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார். சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும், தேவர்களையும் அனுப்பினார். சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.
அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள், வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை. எனவே, தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் “சிவாயநம” என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார். உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது. இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர். அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.
இப்படி சென்ற சுந்தரரும், சேரமான் பெருமாளும், கீழ் நோக்கிப் பார்த்தனர். ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு “நீயும் வாயேன் பாட்டி’ என்று அழைத்தனர். பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று ஔவைப்பாட்டி பதில் அளித்தாள். அப்போது விநாயகர் ஔவையார் முன் தோன்றி, “நீயும் கைலாயம் போக வேண்டுமா?’ என்றார்.
“நீ இருக்கும் இடமும், உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத்தான். நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ’ என்றார் ஔவையார்.
“ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய். தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு என்றதும், “சீதக்களப’ என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார். பாடி முடிந்ததும், விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி, சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.
கைலாயத்தை அடைந்த பிறகு ஔவையாரை சுந்தரரும், சேரமான் பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர். விநாயகர் முதற்கடவுள். அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் ஔவை. இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன்தமிழ் பாடல்.