முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அல்லது சமல் ராஜபக்ச ஆகியோரை மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் குமார வெல்கம முன்வைத்த யோசனையை மகிந்த ராஜபக்ச முற்றாக நிராகரித்துள்ளார்.
குமார் வெல்கம, கடந்த சில வாரங்களாக கோத்தபாய ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவை தலைவராக கொண்டு தொடர்ந்தும் இந்த அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது எனவும் கோத்தபாய அல்லது சமல் ராஜபக்ச ஆகிய இருவரில் முன்நிறுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குமார் வெல்கமவின் இந்த யோசனையை அடுத்து கடும் ஆத்திரமடைந்த மகிந்த ராஜபக்ச, அவரை திட்டி வெளியேற்றியதாக கூட்டு எதிர்க்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் தன்னையே கோருவதாகவும் பசில், கோத்தா அல்லது சமலை கோரவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் பைத்தியகாரர்களுக்கு இது புரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த சந்திப்பின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க, மகிந்த ராஜபக்சவை சந்தித்து இந்த யோசனையை முன்வைத்துள்ளார். அவரையும் கடுமையாக திட்டியுள்ள மகிந்த ராஜபக்ச இப்படியான யோசனைகயை இனிமேல் தன்னிடம் முன்வைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
கோத்தபாயவுக்கு ஒன்றும் புரியாது எனவும் அவர் சிலரது பேச்சை நம்பி ஜனாதிபதியின் பொறியில் சிக்கியுள்ளதாகவும் மகிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்ச தனிக்கட்சியை ஆரம்பிக்க மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விதுர விக்ரமநாயக்க, புதிய கட்சியை ஆரம்பித்தால் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சுலபமாக வெற்றிப்பெறும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மகிந்த ராஜபக்ச, இது தன்னுடைய பிரச்சினையல்ல எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் தேவைக்கு அமைய 2020 ஆம் ஆண்டிலும் தோல்வியடைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்த தாமும் சம்பந்தப்பட நேரும் என்பதால், இது தொடர்பாக தாம் கடும் தீர்மானத்தை எடுக்கப்பது குறித்து கலந்துரையாடிள்ளதாக பேசப்படுகிறது.