கண்டி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களை இணைத்து பாரிய அபிவிருத்தி வலயமொன்று அமைக்கப்பட இருக்கிறது. இரண்டு விமான நிலையங்களும் இரண்டு துறைமுகங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முத்துராஜவெல கைத்தொழில் வலயத்தின் முதலாவது சேவைகள் நகரத்தின் முதல் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வங்காள விரிகுடாவில் உள்ள நாடுகளின் அபிவிருத்தியில் திருகோணமலை துறைமுகத்திற்கு வர்த்தக ரீதியில் பாரிய கிராக்கி நிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியமைக்கப்படும்.
யுத்தத்தின் பின்னர் பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய வர்த்தக வலயங்களும் மேம்படுத்தப்படும். இதற்கு பாரியளவிலான நிதி தேவைப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த அரசாங்கம் பெற்ற கடனை தற்போது செலுத்த வேண்டியிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.