எமது மாகாணம் பல விதங்களிலும் மற்றைய மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. நதிகள் அற்ற ஆனால் நற்குளங்களையும் கிணறுகளையும் கொண்டதொரு பிரதேசம். எனவே தனித்துவமான ஒரு நீரியல் கொள்கை எமக்கு அவசியமாகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்ளூர் நிபுணர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கு இன்று காலை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்ளூர் நிபுணர்கள் கலந்து கொள்ளும் இவ் ஆய்வரங்கின் தொடக்க அமர்வில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.
கொழும்பில் அல்லது மற்றைய மாகாணங்களில் வகுக்கப்படும் கொள்கையானது எமக்கு ஏற்புடையதாகும் என்று கூறமுடியாது.
அதனால்தான் எமது அறிவுசார் உள்ளூர், சர்வதேச நிபுணத்துவப் பெருமக்களை அழைத்து எமக்கென நீரியல் கொள்கை ஒன்றை வகுக்க முற்பட்டுள்ளோம்.
முதலில் கொள்கை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம். கலந்துரையாடலின் பின்னர் ஏதேனும் ஒரு துறை பற்றி அரசியல் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களே கொள்கைக்கு அஸ்திவாரமாகின்றன.
ஒரு குறிப்பிட்ட துறையில் எதனை, ஏன், எவ்வாறு செய்யவேண்டும் என்று முடிவெடுப்பதே மேற்படி தீர்மானங்கள்.
மேலெழுந்தவாரியாக நாட்டுக்கென ஒரு பொருளாதாரக் கொள்கையை வகுக்கலாம். அதே நேரத்தில் நாட்டின் ஒவ்வொரு துறை சம்பந்தமாகவும் வகுக்கலாம்.
அதே போன்று மாகாண ரீதியாகவும் வகுக்கலாம். எவ்வாறு ஒரு துறை சம்பந்தமாக அபிவிருத்தி நடைபெறவேண்டும், சுற்றுச்சூழல் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற அனைத்தினதும் வடிவமைப்பு கொள்கையினுள் அடங்கும்.
மத்திய அல்லது மாகாண அரசாங்கம் கொள்கையை வகுத்த பின் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு அந்தந்த அரச, மாகாண திணைக்களங்களுக்கு உண்டு.
ஆனால் சில நேரங்களில் கொள்கைக்கும் சட்டத்திற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படலாம். ஆகவே நாங்கள் கொள்கை வகுத்தலில் ஈடுபடும் போது சட்டத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சில தடவைகளில் சட்டத்தை மாற்ற வேண்டியிருக்கும். சில வேளைகளில் கொள்கையை மாற்ற வேண்டிவரும்.
ஒரு நாட்டின் அல்லது மாகாணத்தின் அப்போதைய சமூக, அரசியல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நோக்குகளின் பிரதிபலிப்பாகவே கொள்கை இருக்கும்.
எனவே கொள்கைகளாவன சமூக, அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப நாளடைவில் மாற்றமடையக் கூடியன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு ஆழக்கிண்டும் கிணறுகள் முன்னர் இருக்கவில்லை. ஆகவே அவை பற்றி அப்போது கொள்கைகள் வகுக்கப்படவில்லை. தற்போது அவற்றை வகுப்பது அவசியமாகியுள்ளது.
65,000 பொருத்து வீடுகள் அந்தளவு போர்க் குழாய்க் கிணறுகளுடன் கட்டப்படுவன என்றே அறிவிக்கப்பட்டது. அவற்றின் தாக்கங்கள் பாரதூரமானவை என்பதை நாம் அறிவோம். ஆனால் கொழும்பு அறிந்திருக்க அவசியமில்லை.
ஆழக்கிண்டும் போர்க் குழாய்க் கிணறுகளுக்கும் எமது வழமையான கிணறுகளுக்கும் வேற்றுமைகள் பல உண்டு. போர்க் கிணறுகள் ஆழ்நீரை அள்ளிவந்து ஆபத்தான பின் விளைவுகளை விளைவிக்கக் கூடியன. இவை எல்லாம் எமது கொள்கை வகுப்பின் போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
இதுகாறும் நடைமுறையில் இருந்து வந்த கொள்கைகள் தேவையெனில் மாற்றப்பட வேண்டும்.
ஆகவே தேவைகளுக்கேற்ற மாற்றத்தை உள்ளடக்காத கடுமையான கொள்கைகளும் கூற்றுக்களும், சதா மாற்றப்பட்டு வரும் கொள்கைகளும் பயனற்றவை என்றே கூற வேண்டும்.
கொள்கைகள் நெகிழத்தக்கதாகவும் இருக்கவேண்டும். திட்டமிடுதலுக்கும் அபிவிருத்திக்கும் உறுதியான அடிப்படையாகவும் அமைய வேண்டும்.
தொழில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்த அரசியல் விருப்பும் அவாவும் இருக்க வேண்டும்.
நடைமுறைப்படுத்த நிதி அவசியம். பொதுமக்கள் நிதியே இதற்காகப் பாவிக்கப்படப் போகின்றது. வங்கிக் கடன்களும் பொதுமக்கள் நிதியே. அவற்றை அவர்களே திருப்பி அடைக்கப் போகின்றார்கள்.
எனவே அரசியல் ரீதியான ஒப்புதல் மிக அவசியமாக அமைகின்றது. சில தருணங்களில் நீரியல் முகாமைத்துவக் கொள்கைகள் நல்லதாக அமைவன. ஆனால் அவை ஜனரஞ்சகம் பெறாதனவாக இருக்கக்கூடும்.
அப்போது அரசியல் ரீதியான தீர்மானங்களை மக்களின் அரசியல் பிரதிநிதிகளே எடுக்க வேண்டிவரும். ஆகவே அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவைப் பெற்றிருப்பது இன்றியமையாதது.
அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு அமைவாக கொள்கைகள் இருந்தால் அவற்றை நடைமுறைப்படுத்த அரசியல்வாதிகளுக்கு இலகுவாக இருக்கும்.