அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் நான்கு பிரதான அதிகாரிகளை புதிய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இலங்கை படையினருக்கு எதிராக போர் குற்றம் சுமத்தி ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் யோசனை முன்வைத்தவர்கள் என சிங்கள வார பத்திரிகை கூறியுள்ளது.
புதிய ராஜாங்க செயலாளராக ரெக்ஸ் மிலர்சன் நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதால், புலம்பெயர் ஈழத்தமிழர்கள் குழம்பி போயுள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
ஜெனிவா யோசனைக்கு முதன்மையாக இருந்து செயற்பட்ட உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக், அந்த யோசனையை முன்னெடுத்து செல்வது குறித்து இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.
புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கையாண்ட அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில், ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை காரணமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் தமிழீழத்தின் அதிகாரம் வீழ்ச்சியடைந்துள்ளதால், யோசனையை திருத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அந்த சிங்கள வார பத்திரிகை கூறியுள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 வது கூட்டத் தொடர் பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதுடன் அதற்கு முன்னர் யோசனை திருத்தப்பட வேண்டும் என அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை ராஜாங்க திணைக்களத்தில் தமது அதிகாரம் வீழ்ச்சி கண்டுள்ளதால், புலம்பெயர் ஈழத் தமிழர்கள், அவசரமாக ட்ரப்ம்புக்கான தமிழர்கள் என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளதாகவும் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் இனவாத நோக்குடன் மேற்படி செய்தியை அந்த சிங்கள வார பத்திரிகை வெளியிட்டுள்ள போதிலும் அமெரிக்காவில் புதிய ஜனாதிபதிகள் பதவிக்கு வந்தாலும் அதன் இலங்கை தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் இல்லை என ஏற்கனவே அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
மேலும் அமெரிக்க போன்ற நாடுகளில் வெளிநாட்டு கொள்கை உட்பட முக்கியமான கொள்கைகள் பற்றி தீர்மானங்களை எடுப்பது அதிகாரிகளே அன்றி அரசியல்வாதிகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.