இலங்கையில் பரிசோதனை கூடங்களால் தரமற்றது என தெரிவிக்கப்பட்ட சீனாவின் சேதன உரத்தை மீண்டும் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிறுவனத்திற்கு மாதிரிகளை அனுப்புவதற்கு இலங்கை இணங்கியுள்ளது என இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ இன்று (26) தெரிவித்தார்.
ஆய்வகங்கள் அங்கீகாரம் பெறாததால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் சோதனைகளை ஏற்க முடியாது என்று சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த சேதன உரத்தை இலங்கைக்கு கொண்டுவர முடியாது என்பதை நாங்கள் சீன அதிகாரிகளுக்கு தெளிவாக்கினோம். மேலும் 16 நாடுகளுக்கு சீன நிறுவனத்தால் அனுப்பப்படும் உரத்தின் தரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் நிறுவன Qingdao Seawin Biotech Group Co., Ltd இன் பிரதிநிதிகள் ஆகியோர் நிராகரிக்கப்பட்ட சீன கரிம உரத்தை மூன்றாம் தரப்பினரின் ஊடாக மீண்டும் பரிசோதிக்குமாறு விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை சீன சேதன உரத்தை தாங்கிய கப்பல் தொடர்ந்தும் இலங்கைக்கு வெளியே உள்ள கடற்பரப்பில் தரித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.