புத்தளம் – வன்னாத்தவில்லு வீதியின் 2 ஆம் கட்டை பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை இடம்பெற்ற வீதிவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளத்திலிருந்து வன்னாத்தவில்லு பகுதியை நோக்கிப் பயணித்த லொறியொன்று, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்த விபத்தின் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தந்தையும், மகனும் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள போதிலும் மகன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
27 வயதுடைய இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கற்பிட்டி, புத்தளம் பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.பீ.சி.ஆர். அறிக்கை கிடைத்த பின்னர்தான் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞனின் தந்தை, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து சம்பவம் தொடர்பில் புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணகளை முன்னெடுத்து வருகின்றனர்.