இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 9-ந்தேதி தொடங்குகிறது. இந்தியாவில் வந்து வங்காள தேசம் டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த போட்டிக்கு முன் வங்காள தேசம் இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த பயிற்சி ஆட்டம் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான இந்திய ‘ஏ’ அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அபினவ் முகுந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபியில் 1310 ரன்கள் குவித்த பிரியங் பன்சால், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இசான் கிஷன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுடன் ஷ்ரேயாஸ் அய்யருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா உடன் தமிழ்நாட்டின் விஜய் சங்கர் ஆல்ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், சபாஸ் நதீம், ஜயந்த் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜயந்த் யாதவ் இங்கிலாந்து தொடரின்போது காயம் அடைந்தார். இந்த போட்டி அவரது உடற்தகுதியை நிரூபிப்பதற்கானதாகும். வேகப்பந்து வீச்சாளர்களில் சமா மிலிந்த், அனிகெட் சவுத்ரி மற்றும் நவ்தீப் சாய்னி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அணியில் மூன்று விக்கெட் கீப்பர்கள் இடம்பிடித்துள்ளனர். ஆனால் இசான் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.