அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மனிதன், பூமி மற்றும் சுபீட்சத்துக்கான காலநிலைச் செயற்பாடுகளை விருத்தி செய்தல்’ என்ற தலைப்பிலான அரச தலைவர்கள் கலந்துரையாடலில், வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போது , அரசதலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், “சர்வதேச ரீதியிலான நிலக்கரியற்ற புதிய சக்தி வலு மாநாட்டின் இணைத் தலைவராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ பிரகடனத்தின் கீழ், சதுப்பு நிலச் சுற்றாடல் கட்டமைப்பு மற்றும் ஜீவனோபாயம் தொடர்பான செயற்பாட்டுக் குழுவுக்கும் சிறிலங்கா தலைமை வகிக்கின்றது.
பசுமை நைட்ரஜன் முகாமைத்துவம் தொடர்பான கொழும்பு அறிக்கையின் பிரகாரம், நைட்ரஜன் வாயு வெளியீட்டின் அளவை 2030ஆம் ஆண்டாகும் போது அரைவாசியாகக் குறைப்பதற்கு சிறிலங்கா முயற்சி எடுத்துள்ளது என அரசதலைவர் கூறியுள்ளார்.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காக, அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. சிறிலங்காவில் காபன் அளவை 2050ஆம் ஆண்டாகும் போது பூச்சியமாக்கிக்கொள்ள எதிர்பார்த்துள்ளது.
2030ஆம் ஆண்டாகும் போது இந்நாட்டின் சக்தி வலுத் தேவையில் 70 சதவீதத்தை மீள்பிறப்பாக்கச் சக்தி மூலங்கள் மூலம் நிறைவு செய்துகொள்ளும் இலக்கை அடைந்துகொள்வதற்காக இலங்கை பயணித்துக்கொண்டிருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.