அமெரிக்க நிறுவனமொன்றுக்கு கெரவலப்பிட்டி யுகதனவி மின் நிலைய 40 வீத பங்குகளை வழங்கும் உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பங்காளி கட்சியில் உள்ள அமைச்சர்களை இன்று அழைத்துள்ளார்.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு அலரிமாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் இந்த கலந்துரையாடலில் பங்கு பற்ற உள்ளார்.
முன்னதாக, யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அவகாசம் கோரி இந்த உடன்படிக்கைக்கு எதிரான அரசில் பங்காளியாகி உள்ள கிளர்ச்சியாளர் குழு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்த போதிலும் ஜனாதிபதி அதற்கு சாதகமாக பதிலளிக்கவில்லை.
பிரதமர் மற்றும் நிதியமைச்சருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பதில் கடிதம் மூலம் பணிப்புரை விடுத்திருந்தார்.
எனினும் அவ்வாறான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறாததையடுத்து, இறுதியில் மகாஜன சபை என்ற பெயரில் நுகேகொடவில் மக்கள் விழிப்புணர்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்த கிளர்ச்சிக் குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை இன்று மாலை அலரிமாளிகையில் நடைபெறவுள்ள யுகதனவி உடன்படிக்கை தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க கிளர்ச்சிப் பிரிவினருடன் மாத்திரம் நடத்தப்பட வேண்டியது அல்ல எனவும் மாறாக அரசாங்க கட்சித் தலைவர்களின் சந்திப்பு எனவும் தெரியவந்துள்ளது.
இதன்படி ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.