2019-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் நேரடியாக 8 அணிகள் தகுதிபெறும். போட்டியை நடத்தும் அணி நேரடியாக தகுதி பெறும். மற்ற 7 அணிகள் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐ.சி.சி.யின் அணிகள் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த தரவரிசை இந்த வருடம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி கடைசியாக கணக்கிடப்படும்.
இந்நிலையில் நேற்று ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட்டிற்கான அணிகளின் தரவரிசையை வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலியா 120 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 116 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும், இந்தியா 112 புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும், நியூசிலாந்து 111 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்திலும், இலங்கை 101 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும், வங்காள சேதம் 91 புள்ளிகள் பெற்று 7-வது இடத்திலும், பாகிஸ்தான் 89 புள்ளிகள் பெற்று 8-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 86 புள்ளிகள் பெற்று 9-வது இடத்திலும் உள்ளது.
7-வது இடத்தில் இருக்கும் வங்காள தேசம் பாகிஸ்தானை விட 2 புள்ளிகள்தான் அதிகம் பெற்றுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 3 புள்ளிகள்தான் அதிகம் பெற்றுள்ளது.
‘‘2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் நேரடியாக தகுதி பெறுவதற்கான முன்னேற்றத்தை பெற முடியவில்லை. இருந்தபோதிலும் அணிகள் தரவரிசையில் சற்று முன்னோக்கி உள்ளது’’ என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வங்காள தேச அணிக்கெதிராக ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுத்த மாதம் முதல் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. அதன்பின் மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதன்பின் இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த போட்டிகளின் முடிவின் அடிப்படையில், தற்போது கடைசியில் இருக்கும் மூன்று அணிகளில் நேரடியாக தகுதிபெறும் இரு அணிகள் எவை என்பது தெரியவரும். இதில் தகுதி பெறாத அணி தகுதிச் சுற்றில் விளையாடி அதனடிப்படையில் உலகக்கோப்பையில் விளையாட தகுதிபெறும்.
சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை பாகிஸ்தான் 1-4 என இழந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.