ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்தின் கீழ் அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவுறுத்தியுள்ளார்.
இந்த விடயத்தினை கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளாத, அரசுக்கு எதிராகவுள்ள சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய வலையமைப்புக்களை வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன (Ruwan Wijewardene) , உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) உள்ளிட்டவர்களில் கண்காணிப்பின் கீழ், கொரோனா நிலைமைக்கு ஏற்றவாறு மேற்குறித்த வலையமைப்புக்களை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்துறையினர் அமைப்பு, பல்கலைக்கழக பேராசிரியர் மன்றம், அரச மற்றும் தனியார் தொழிற்சங்கள் உள்ளிட்ட சகல அமைப்புக்களையும் ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickramasinghe) வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய துரிதமாக வலுப்படுத்த வேண்டும்.
தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வலையமைப்புக்களை வலுப்படுத்தும் அதேவேளை, கட்சியின் தனித்துவத்தின் கீழ் அரசுக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டங்களையும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.