சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. மீண்டும் வலியுறுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரின் போது இது குறித்த பரிந்துரையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் முன்வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பான பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளன.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அந்த பரிந்துரையை நிராகரித்த இலங்கை அரசாங்கம், அதனை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.
எனினும் அதனை மறுத்த ஐ.நா. மனித உரிமை அலுவலகம், ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் எப்போதுமே சர்வதேச பங்களிப்புடனான விசாரணையையே வலியுறுத்துகின்றார் என்றும் அந்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.