டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியில் பக்கா ஃபார்மில் இருக்கும் ஆசிப் அலி பரபரப்பான கடைசி நேரத்தில் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து, பாகிஸ்தானுக்கு வெற்றியை உறுதிசெய்தார்.
இன்று அபுதாபியில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ஷாஜாத் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் டக் அவுட் ஆனார்.
அடுத்து இறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ், அஸ்கர் ஆப்கான் தலா 10 ஓட்டங்ககள் எடுத்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் 64 ஓட்டத்திற்கு 5 விக்கெட்டை இழந்தது.
அடுத்ததாக 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய நஜிபுல்லா சத்ரன் நிதானமாக விளையாடி 22 ஓட்டங்கள் சேர்த்தார். மத்தியில் இறங்கிய கேப்டன் முகமது நபி, குல்பாடின் நைப் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இறுதியாக ஆப்கானிஸ்தான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தனர். கடைசிவரை களத்தில் முகமது நபி , குல்பாடின் நைப் தலா 35 ஒய்யங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றனர்.
பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளும், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி, ஷதாப் கான் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
இதையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 8 ஓட்டங்களிலும், பகர் சமான் 30 ஓட்டங்களிலும், முகமது ஹபீஸ் 10 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து 51 ஓட்டணங்களில் வெளியேறினார். அதையடுத்து களமிறங்கிய ஷோயப் மாலிக் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ஆசிப் அலி அதிரடியாக விளையாடி ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இதன்மூலம் பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்முலம், குரூப்-2வில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.