போர்க்குற்றம் மேற்கொண்ட நபர்கள் உள்ளார்கள் என்றால் தராதரம் பாராமல் தண்டனை வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உலகின் திறமையான இராணுவம் என்றாலும் தவறிழைக்கக்கூடிய சிலர் இருக்க கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மல்வத்து அஸ்கிரி மஹநாயவை நேற்று சந்தித்த போது பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து நுகேகொடயில் மஹிந்த நடத்திய பேரணி குறித்து கருத்து வெளியிட்டார்.
விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இந்த பேரணியில் உரையாற்றியமை தொடர்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.
“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனின் உயிரை காப்பாற்றுவதாக கூறி தப்பி வந்த மனிதனாகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்பதற்கு, அவர் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்”.. என அவர் குறிப்பிட்டுள்ளார்.