அமெரிக்காவில் நிகழ்ந்த அரசியல் மாற்றம் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி நடந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவு அமெரிக்கர்கள் மட்டுமல்ல, ஏனைய நாட்டவர்களும் எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும், வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. தான் அதிகாரத்திற்கு வந்தால் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவேன் என்று தேர்தல் பிரசாரங்களின் போது ட்ரம்ப் அதிகம் சொல்லியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதுடன், நேற்று முந்தினம் அமெரிக்காவிற்குள் சிரியா, லிபியா, ஈரான் உட்பட ஏழு நாட்டவர்களுக்கு விசா வழங்கப்படாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பில் பல்வேறு நாடுகளும் விமர்சனம் வெளியிட்டுள்ளதுடன், அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது இதற்கு காரணம் தெரிவித்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்,
சிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக யாரும் இனி அமெரிக்கா வர முடியாது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்தேன்.
சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலே சொன்ன குறித்த ஏழு நாடுகளும், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள்.
அங்கே முஸ்லிம்களின் ஆட்சி நடைபெறுகிறது. ட்ரம்பின் இந்த முடிவானது, ஒரு விடயத்தை மிகத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
முஸ்லிம்களுக்கு எதிரான அவரின் வன்மத்தையும், அவரின் எதிர்ப்பையும் காட்டியிருக்கிறது.
எனினும் அவரின் இந்த முடிவை உடனடியாக விமர்சனம் செய்தவர்கள், ஃபேஸ்புக் சிஇஓ மார்க் சுக்கர்பெர்க்ம், கூகுள் முதன்மைப் பொறுப்பாளராக இருக்கும் சுந்தர் பிச்சையும் தான். இவர்கள் இரண்டு பேருமே ஒரு கருத்தில் ஒத்துப் போகின்றார்கள்.
அமெரிக்காவின் வரலாற்றில் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் நிச்சையம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஏனெனில், தன்னுடைய எதிர்ப்பு உணர்விற்காக குறித்த நாட்டவர்களுக்கு விசா வழங்கப்படாது என்றும், குடியேற்றவாசிகள் வெளியேற்றப்பட வேண்டும் எனச் சொல்வதும் ஏனைய நாடுகளை பகைத்துக் கொள்வதைப் போன்றதாகவே தோன்றுகிறது.
இதுவொருபுறமிருக்க, அமெரிக்காவின் பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் அதிகரிக்கும்.
ஆக, அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாறுதல்கள் எதிர்வரும் காலங்களில் புலம்பெயர் வாசிகளுக்கு பேராபத்தைத் தான் உருவாக்கும்.
அதனால் தான் இப்பொழுதே இந்த எதிர்ப்புக்கள், அதிருப்திகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உணர்ந்து கொள்வாரா தெரியவில்லை.
இது அமெரிக்காவின் வெளிநாட்டு நட்புறவிற்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.