சுவிட்சர்லாந்தின் மருத்துவ கண்காணிப்பு ஆணையமான சுவிஸ்மெடிக், கோவிட் சிகிச்சைக்காக விலங்குகளுக்காக தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொள்ள வேண்டாம் என்று மக்களை எச்சரித்துள்ளது.
குதிரைகளில் உள்ள புழுக்களுக்கு சிகிச்சையளிக்க வடிவமைக்கப்பட்ட மருந்துகள் கோவிட்க்கு எதிரான சிறந்த சிகிச்சை என்ற ஓன்லைன் சதி கோட்பாடுகளின் அடிப்படையில் சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்யப்படுவதாக சுவிஸ்மெடிக் (Swissmedic) கூறியுள்ளது.
ஐவர்மெக்டின் (ivermectin) என்ற செயலில் உள்ள மூலப்பொருள் கொண்ட இந்த மருந்து, அமெரிக்காவில் உள்ள சதி கோட்பாட்டாளர்களால் கோவிட் நோய்க்கான சாத்தியமான சிகிச்சையாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம், இந்த மருந்தை கேட்பவர்களிடம், அவர்கள் குதிரை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை கால்நடை மருத்துவர்கள் கேட்கிறார்கள். அந்த அளவிற்கு இந்தத் தவறான தகவல் மிகவும் பரவலாகிவிட்டது.
உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் கோவிட் சிகிச்சையில் எந்த மருந்தும் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இந்த மருந்து குதிரை ஒட்டுண்ணிகளுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், “கவனமாக இருங்கள்,. கட்டுப்பாடில்லாமல் ஐவர்மெக்டினை எடுத்துக் கொள்ளும் எவரும் தங்கள் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள்” என்று சுவிஸ்மெடிக் மக்களை எச்சரித்துள்ளது.
சுவிஸ் அதிகாரிகள், மக்கள் குதிரை மருந்துகளை இணையம் வழியாக வாங்கவோ அல்லது வேறு இடங்களில் இருந்து கொண்டு வரவோ கூடாது என்றும், மருத்துவ சிகிச்சைகள் வழக்கமான சேனல்கள், அதாவது மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் வழியாக வர வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.