தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்.