கூகுளின் மின்னஞ்சல் சேவையில் JavaScript attachmentகளை தடுக்க போவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மெல்வேர் தாக்குதல்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூகுள் வலைபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 13, 2017 முதல் ஜிமெயிலில் .js தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியாது.
தற்சமயம் .js தரவுகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே .exe, .msc, மற்றும் .bat போன்ற தரவுகளை ஜிமெயில் ஏற்கனவே முடக்கியுள்ளது.
இதுபோன்ற தரவுகளை பெரும்பாலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே முடக்குவதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு பின் .js தரவுகளை பரிமாற்றம் செய்ய முற்படும் போது ஜிமெயில் சார்பில் இந்த நடவடிக்கை முடக்கப்பட்டு விடும்.
பின் நீங்கள் பதிவேற்றம் செய்ய முற்பட்ட தரவு ஏன் முடக்கப்பட்டுகிறது என்பதை விளக்கும் கூகுள் தகவல் உங்களின் திரையில் தெரியும் அதில், ‘இதை நீங்கள் பார்க்க பல்வேறு காரணங்கள் உள்ளது இந்த தரவு முடக்கப்பட முக்கிய காரணம் இதில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதே ஆகும்.
சில தரவுகள் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை பரப்புவதால் ஜிமெயில் இது போன்ற தரவுகளை முடக்குகிறது’, என குறிப்பிடப்படுகிறது.
ஜிமெயிலில் .தள தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியாது என்றாலும் கூகுள் டிரைவ், கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி தரவுகளை பரிமாறி கொள்ள முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. இது தவிர கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்படும் தரவுகளையும் கூகுள் தடுக்கும்.
ஜாவாஸ்க்ரிப்ட் பயன்படுத்தி மெல்வேர்களை பரப்பும் முறை அதிகளவு பயன்படுத்தப்படுவதால் கூகுள் இவற்றை தடுக்கிறது.
இது போன்ற மெல்வேர் இருக்கும் தரவுகளை வாடிக்கையாளர்கள் தங்களின் கணினிகளில் திறக்கும் பட்சத்தில் ஹேக்கர்கள் வாடிக்கையாளர்களின் முழு தகவல்களையும் திருட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.