தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அதற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் மாமாங்கேஸ்வரர் சிக்கனக் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுளள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
”எழுக தமிழ் நிகழ்வில் தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் கலந்துகொண்டு வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டி வடிவிலான தீர்வே தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கான ஒரே வழி என்பதை உலகறியச் செய்தல் வேண்டும். இது ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களினதும் தலையாய கடமையாகும்.
கடந்த அறுபது எழுபது வருடங்களாக தங்களது உரிமைக்காகப் போராடிவரும் சிறுபான்மையின மக்கள் சலித்தும் களைத்தும் போகவில்லை என்பதை இந்நாட்டு அரசுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டுவதற்கு ‘எழுக தமிழ்’ ஓர் அரிய சந்தர்ப்பம். தொடர்ச்சியான மக்களது போராட்டம் தோற்றுப்போன வரலாறு உலகில் இல்லை.
அந்தவகையில், சிறுபான்மை மக்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து ஜனநாயகப் போராட்டங்களிலும் மாமாங்கேஸ்வரர் சிக்கனக் கூட்டுறவுச் சங்கம் பங்கேற்கும். சிறுபான்மையினரின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக அனைவரும் போராட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.