அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றாப்படின் மக்கள் பிறிதொரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன(Professor Tissa Vitharana) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தில் ஆளும் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் பல்வேறுப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. அந்த முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ள அரச தலைவர் மற்றும் பிரதமர் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் சிறந்த தீர்மானத்தை எடுக்கும் வகையில் அமையவில்லை.
கூட்டணிக்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு வரவு- செலவுத் திட்டத்தை முன்னிலைப்படுத்தி தீர்வு காண பங்காளி கட்சியின் ஒருசில தரப்பினர்கள் தீர்மானித்துள்ளார்கள். முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்(Mahinda Rajapaksha)ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பங்காளி கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது. நடப்பு அரசியல் முறைமை தொடர்பில் பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்களின் கருத்துக்கள் வெறுக்கத்தக்கதாக உள்ளது.
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksha)தலைமையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். எனவே அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதவிடின் ஆட்சி மாற்றத்தை அவர்கள் ஏற்படுத்துவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.