இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று அபுதாபியில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனால் முதலில் இங்கிலாந்து களமிறங்கிய நிலையில், அணியின் ஓபனர் ஜானி பேர்ஸ்டோ 17 பந்துகளில் 13 ஓட்டங்களை மட்டும் அடித்து, ஆடம் மில்னே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு ஓபனர் ஜாஸ் பட்லரும் 29 (29) பெரிய ஸ்கோர் அடிக்காமல் இஷ் சோதியின் சூழலில் நடையைக் கட்டினார். அடுத்து டேவிட் மலான், மொயின் அலி ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவுக்கு ஓட்டங்களை சேர்க்க துவங்கினர்.
ஆனால், 15-வது ஓவர் முடிவுவரை இருவராலும் பவுண்டரிகளை மட்டுமே அதிகமாக அடிக்க முடிந்தது, இங்கிலாந்து அணியால் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை.
இந்நிலையில் டிம் சௌதீ வீசிய 16.1-வது ஓவரில் மலான் முதல் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து அடுத்த பந்திலேயே 42 (30) ஓட்டங்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மொயின் அலி அதிரடியாக விளையாட ஆரம்பித்ததால், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் ஓரளவுக்கு ஏற்றம் கண்டது.
மொயினுக்கு துணையாக விளையாடி வந்த லியம் லிவிங்ஸ்டன் 17 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில், ஜேம்ஸ் நீஷம் வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்த பந்தில் மோயின் பவுண்டரி அடித்து 36 பந்தில் அரை சதம் எடுத்தார். 4-வது பந்தில் சிங்கில் சென்றது. கடைசி இரண்டு பந்துகளை இயான் மோர்கன் எதிர்கொண்டு நான்கு ஓட்டங்கள் (2,2) அடித்தார்.
இதனால், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. மொயின் அலி 51 (37), மோர்கன் 4 (2) அவுட் ஆகாமல் இருந்தனர்.
நியூசிலாந்து அணி சார்பில் டிம் சௌதீ, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து இலக்கைத் துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தீல் 4 (3), கேன் வில்லியம்சன் 5 (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர்.
இதனால், நியூசிலாந்து அணிக்கு துவக்கதிலேயே பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் ஓபனர் டேரில் மிட்செல், டிவோன் கான்வே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட தவங்கினர்.
சிறப்பாக விளையாடி கான்வே 38 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து 4 ஓவர்களில் 57 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு நியூசிலாந்து தள்ளப்பட்டது.
அப்போது கிறிஸ் ஜோர்டன் ஓவர் வீச வந்தநிலையில் ஜேம்ஸ் நீஷம் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார். இதனால், அந்த ஓவரில் 23 ஓட்டங்கள் கசிந்தது. தொடர்ந்து அடுத்த ஓவரில் அடில் ரஷித் பந்தில் நீஷம், மிட்செல் இருவரும் தலா ஒரு சிக்ஸர் அடித்தார்கள்.
கடைசி பந்தில் நீஷம் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடைசி 12 பந்துகளில் 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அப்போது கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் டேரில் மிட்செல் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.
அந்த கடைசி திக் திக் நிமிடங்களில், 9 பந்துகளில் 6 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கு தென்பட்டது. அடுத்த 2 பந்துகளில் சிங்கில் சென்ற நிலையில், இறுதியில் அந்த 19-வது ஓவரின் கடைசி பந்தில் மிட்செல் பவுண்டரி அடித்து, அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
இதனால், நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் முடிவில் 167 ஓட்டங்கள் சேர்த்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.
டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி 2 முறை அரையிறுதிவரை முன்னேறி தோற்றிருந்தது. இந்நிலையில், மூன்றாவது முறை அரையிறுதிக்கு முன்னேறி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.