காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து, அம்பாறை மாட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
அம்பாறை – திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால், அம்பாறை மாவட்ட காணாமல் போனோரை கண்டறியும் சங்கத்தின் தலைவி எஸ்.செல்வராணி தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், ‘காணாமல் ஆக்கப்பட்டோர் காரியாலயத்தை திறப்பதற்கு இலங்கை அரசு கைச்சாத்திட வேண்டும்’, ‘காணாமல் போனோர் உயிருடன் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்’, ‘இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.
கடந்த யுத்த சூழ்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 3 ஆயிரம் பேர்வரை காணாமல் போயுள்ளதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காணாமல் போனோர் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றில் பிரதமர் ரணில் தெரிவித்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது வேதனைதரும் விடயமென்றும் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை, கடந்த காலத்தில் வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாக தெரிவித்த மக்கள், காணாமல் போனோர் சித்திரவதை முகாம்களில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்தும் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென கவலை தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசனிடம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்புவதற்கான மகஜரொன்றை காணாமல் போனோரின் உறவினர்கள் கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட கலையரசன், காணாமல் போனோர் பிரச்சினை குறித்து அரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்குமென தெரிவித்துள்ளார்.