தமிழகத்தை உலுக்கியுள்ள கோவை மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை பொலிசார் சற்று முன்னர் கைது செய்த நிலையில் வழக்கு தொடர்பில் பல்வேறு புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அந்த 17 வயது மாணவி, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் ஆர்.எஸ்.புரம் சின்மயா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்தபோது அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவன் மாணவிக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்தான் என்று கூறப்படுகிறது.
அதுகுறித்து பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படும் நிலையில், மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு மாணவி வேறு பள்ளியில் சென்று 12ஆம் வகுப்பில் சேர்ந்துகொண்டார்.
ஆனாலும் தொடர்ந்து மன உளைச்சலோடு காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனிடம் மாணவி பலமுறை புகாரளித்தார் என்றும் ஆனால் அந்தப் புகாரின் மீது அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதன் காரணமாகவே மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனவே மீரா ஜாக்சனையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி, சக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சின்மயா பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் வழக்குப்பதிவு செய்த பொலிசார், தலைமறைவாக இருந்த அவரைப் கைது செய்துள்ளனர்.
கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவது அவர் எழுதிவைத்த கடிதம்தான். அந்தக் கடிதத்தில், யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா. எலிசா சாருவோட அப்பா. இந்த சார், யாரையும் விடக் கூடாது மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைதுசெய்தனர்.
ஆனால், கடிதத்திலுள்ள மற்ற இரண்டு பேர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இது குறித்து மாணவி பெற்றோர் கூறுகையில், அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
நாங்கள் வாடகை வீடுதான். பல வீடுகள் மாறிவிட்டோம். அதனால், எங்களுக்கு அதில் இருக்கும் பெயர்கள் தெரியவில்லை என கூறியுள்ளனர்.
உறவினர்கள் கூறுகையில், மற்ற இரண்டு சம்பவங்கள் மாணவி 6-ம் வகுப்பு படிக்கும்போது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது அவர் தோழிகளின் தந்தை, தாத்தவாக இருக்கலாம் இருப்பினும், மிதுன் சக்கரவர்த்திதான் உடல்ரீதியாக, நேரடியாக வன்கொடுமை செய்திருக்கிறார்.
அதனால்தான் மிதுன் சக்கரவர்த்தி மீது அவர் அதிக கோபத்துடன் இருந்தார். அந்தச் சம்பவத்துக்கு பிறகு அவருக்கு ஆண்களைப் பார்த்தாலே அருவருப்பாகிவிட்டது.
மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். ஒருமுறை கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். எனவே, இந்தச் சம்பவத்துக்கு பிறகு சிறு வயதில் நடந்த சம்பவங்களையும் மனதில் யோசித்து பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அதனால், அவர்கள் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.
இதனிடையில் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் தற்கொலைக்கு முன்பாக எழுதப்பட்டதாகக் கூறப்படும் அந்த கடிதம் தற்போது நடந்த சம்பவம் தொடர்பானது இல்லை என மாணவியின் தந்தை தெரிவித்துள்ளது குழப்பத்தையும், வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
ஏனெனில் அந்த கடிதத்தை மாணவி எப்போது எழுதினார்? அல்லது அவர் எழுதவே இல்லையே என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த கடிதம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.