ஒற்றைத் தலைவலி பலரை பாடாய்ப்படுத்தும் விஷயமாக இருக்கிறது. ஒற்றைத் தலைவலி வந்தால் எளிதில் போகாது, நாள் முழுவதும் இருந்து தொல்லை கொடுக்கும். எப்போதோ ஒருநாள் என்றில்லாமல், அவ்வப்போது வந்து ஒற்றைத் தலைவலி தொந்தரவளிக்கும். இது, தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோயாகும்.
ஒற்றைத் தலைவலியால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். பதிலுக்கு, பின்வரும் முறைகளைப் பின்பற்றி நிவாரணம் பெறலாம்…
ஒற்றைத் தலைவலி உண்டாகும்போது ஒரு டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிக்காய் மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.
முட்டைக்கோஸ் இலைகளை நன்றாக இடித்து ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும். லவங்கப்பட்டையைப் பொடி செய்து நீரில் குழைத்து சிறிது தலையில் தேய்த்துவிடுங்கள்.
காய்ந்ததும் துடைத்தால் மூக்கடைப்பு விலகும், தலைவலி மறையும். திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம் மற்றும் உப்பு ஆகியவற்றை பாலில் ஊற வைத்து அரைத்துச் சிறு உருண்டையாகச் செய்து காய வையுங்கள். அதன்பின், தலைவலி வரும்போது ஒரு உருண்டையை நீரில் கரைத்து நெற்றியில் பற்று இடுங்கள். வெள்ளை எள்ளை பாலில் ஊற வைத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.
தொடர்ந்து 3 நாட்கள் இப்படிச் செய்து வந்தால் ஒற்றைத் தலைவலி வராது. வைட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுக்கோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைப் பருப்புகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ணலாம்.