எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள 83 ஆவது வடமாகாணசபை அமர்வில் எதிர்க்கட்சித்தலைவரும், ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினருமான சி.தவராசாவினால் வடமாகாணக் கல்விச் செயலரை ஆசிரியர்கள் அவமதித்தமையைக் கண்டித்து வடக்கு மாகாணசபையில் பிரேரணை கொண்டு வரவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
வடமாகாணக் கல்விச் செயலாளரை ஆசிரியர்கள் அவமதித்ததாகவும், கல்வியமைச்சின் செயலாளரின் கொலரைப் பிடித்துள்ளனர் எனவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சித் தலைவர் சுமத்தியுள்ளமை வடமாகாணக் கல்வியமைச்சு மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கிய தவறான பணித்தடையினை நியாயப்படுத்தும் செயற்பாடாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இன்று(29) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவது,
வடமாகாணக் கல்வியமைச்சில் இடம்பெறும் அநீதிகள், பாரபட்சங்கள், இடமாற்ற முறைகேடுகள், ஆசிரியர்களுக்குரித்தான சம்பள ஏற்றங்கள், நிலுவைகள் வழங்கப்படாமை தொடர்பாக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் வடமாகாணக் கல்வியமைச்சின் சீர்கேடுகள் தொடர்பாகவுமே எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணை கொண்டுவந்திருக்க வேண்டும்.
அத்துடன், கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாகப் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இரண்டு பக்க நியாயங்களையும் அறிந்து செயற்பட்டிருக்க வேண்டும்.
மேலும், வடமாகாணக் கல்வியமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகளால், ஆசிரியர்களின் ஜனநாயக உரிமை நசுக்கப்பட்டமை தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.