அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் இலங்கைக்கு சாதகமாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையினை சமகால அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் இராஜதந்திர அதிகாரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
ஆசிய விவகாரங்களுக்கான பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதர் சமந்தா பவர் நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அதிகாரிகள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதனை இலங்கைக்கு நன்மையாக்கிக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் இதுவரையில் இலங்கை தொடர்பில் நேரடி கருத்து வெளியிடாத போதிலும், அரசாங்கம் அவருடன் சிறப்பான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நடவடிக்கையே தற்போது மேற்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவிற்கமைய இலங்கைக்கு எதிராக கருத்து வெளியிட்ட அதிகாரிகள் சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தன.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நா சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் சமந்தா பவர், கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். இது இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.