நாட்டின் நீதித்துறைக்கு கட்டுப்பட்டு நடக்கத் தெரியாத ஞானசார தேரருக்கு (Galagodaaththe Gnanasara) மாவீரர்களை நினைவேந்துவது குறித்தோ, தமிழ் அரசியல்வாதிகள் குறித்தோ கருத்துரைப்பதற்கோ எந்த அருகதையும் இல்லை என்றார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (Sivagnanam Shrithara).
ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு பதில் வழங்கும் போதே சிறிதரன் இதனைக்கு கூறினார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
மாவீரர்களை நினைவேந்துவது தமிழர்களின் உயிர்ப்போடும், உணர்வோடும், கலாசார மரபியல்களோடும் இரண்டறக் கலந்த நிகழ்வு. அந்த நினைவேந்தலுக்கான உரிமை மறுக்கப்படுகிறபோது அதற்கெதிராய் குரல் கொடுப்பதென்பது தன்னியல்பு.
எமது உரிமைக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவே தயாராயில்லாத, எந்நேரமும் இனவாதத்தைக் கக்கும் ஞானசாரதேரரின் இத்தகைய கருத்து, அதிலும் குறிப்பாக மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளில் அவர் தெரிவித்துள்ள இக்கருத்து தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப்பார்ப்பதாகவே அமைந்துள்ளது.
தென்னிலங்கையில் இருந்த தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை இடித்தழித்துவிட்டு, தமிழர்களின் பூர்வீக நிலங்களான வெடுக்குநாறி மலையிலும், குருந்தூர் மலையிலும், உருத்திரபுரீஸ்வரத்திலும் பௌத்த சிங்கள அடையாளங்களை நிறுவுவதற்காக கங்கணம் கட்டி நிற்கும் ஞானசேர தேரரை ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக நியமித்தமை இந்த நாட்டிற்கே அவமானம்.
அந்த நியமனமே இலங்கை அரசின் இனவாத முகத்தை எண்பிப்பதற்கு போதுமான சாட்சியம் ஆகும் என அவர் கூறியுள்ளார்.