சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சி3’ படம் வருகிற பிப்ரவரி 9-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. சூர்யா – ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமாக வெளிவரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அப்போது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, தமிழ், தெலுங்கு சினிமாவில் ரஜினிக்கு அடுத்த வியாபாரம் என்றால் அது சூர்யாவுக்குத்தான். ‘சிங்கம் 3’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ 100 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி அதை நிரூபித்துள்ளது. தமிழ், தெலுங்கில் ரஜினி சாருக்கு அடுத்து சூர்யாதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று பேசினார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள ‘சி3’ படத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.