சுவீடன் நாடு தனது முதல் பெண் பிரதமரை பெற்றதை கொண்டாடுவதற்கு முன்பே அவரது பதவி விலகல், அந்த நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
சுவீடன் நாட்டில் ஸ்டீபன் லேப்வென் என்பவர் பிரதமர் பதவி வகித்து வந்தார். அவர் சமீபத்தில் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் சோசலிச ஜனநாயக கட்சி தலைவர் பதவியை விட்டும் விலகினார்.
இதையடுத்து அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் (வயது 54), நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த நாடு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கி 100 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போதுதான் முதன் முதலாக ஒரு பெண் தலைவர் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இது வரலாற்று சாதனையாக அமைந்தது.
அவரது தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்றத்தில் அவரது பட்ஜெட் தோல்வி கண்டது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பட்ஜெட் நிறைவேறியது. இதையடுத்து மெக்தலினாவின் சிறுபான்மை அரசுக்கு அளித்த ஆதரவை கிரீன் கட்சி அதிரடியாக விலக்கிக்கொண்டது.
அந்த நாட்டின் அரசியல் சாசன நடைமுமுறைப்படி கூட்டணிக் கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டால் அரசு பதவி விலகித்தான் ஆக வேண்டும்.
அந்த நடைமுறைப்படி மெக்தலினா பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து அவர் சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நோர்லனிடம் தெரிவித்து விட்டார். இதை அவரே உறுதியும் செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘சட்டப்பூர்வ தன்மை கேள்விக்குள்ளாகும் ஒரு அரசை நான் வழிநடத்த விரும்பவில்லை. அதே நேரத்தில் சோசலிச ஜனநாயக கட்சியின் ஒரு கட்சி அரசை ஏற்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்’’ என தெரிவித்தார்.
இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசியல் கட்சித்தலைவர்களுடன் தொடர்பு கொள்வேன் என்று சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நோர்லன் அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழக நகரமான உப்சாலாவைச் சேர்ந்த மெக்தலினா, முன்னாள் நீச்சல் வீராங்கனை ஆவார். 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் கோரன் பெர்சானின் அரசியல் ஆலோசகராக அரசியலில் நுழைந்தார். கடந்த 7 ஆண்டுகளாக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்தார்.
சுவீடன் நாடு தனது முதல் பெண் பிரதமரை பெற்றதை கொண்டாடுவதற்கு முன்பே அவரது பதவி விலகல், அந்த நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
சுவீடனில் யார் பிரதமராக வந்தாலும் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியது வரும், கும்பல் வன்முறை, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தலைநகர் ஸ்டாக்ஹோம் மற்றும் பிற முக்கிய நகரங்களின் பல புறநகர்ப்பகுதிகளில் வாழ்க்கையை பாதித்துள்ளன என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.