2009 விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மீண்டும் அவர்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு அறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது விடுதலைப் புலிகள் சர்வதேச மட்டத்தில் ஒன்றிணைவதற்காக இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் இயங்குவதாக Siasat Daily என்ற ஊடகம் தகவல் வெளியட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் இரகசிய அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த செய்தியை ஆசிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக விடுதலைப் புலிகள் செயற்படத் தயாராகின்றனர் என்று சித்தரித்துக் காட்டும் வகையில் இந்த தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
புலம்பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் மூலம் விடுதலைப் புலிகள் புத்துயிர் பெறுவதுடன், ஆயுத மற்றும் வெடிமருந்தினால் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற மாவீரர் தினத்தில் தாயகத்தில், மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி இந்திய அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு அச்சம் கொண்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு பிரிவுகள் மீது இலக்கு வைத்துள்ள ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளவர்களே விடுதலை புலிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரமுயற்சிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை உலக பயங்கரவாத அமைப்பாக மாறியுள்ள ஐ.எஸ், இந்தியா மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக பல்வேறு உளவு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவ்வாறு ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பி விடும் நோக்கில் இந்திய அரசாங்கம் உள்ளதாக தெரியவருகிறது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இந்த இரகசிய ஆவணம், இந்திய அரசாங்கத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக காட்டும் வகையில் இந்த அறிக்கை வெளியாகி இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.