நியூசிலாந்து வீரர்கள் டாம் லாதம், வில்லியம் சோமர்வில் ஆகியோர் இந்திய பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டு விக்கெட்டை பாதுகாத்து கொண்டனர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 345 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 49 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது.
இதனால் மொத்தம் 283 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றது. ஆகவே, நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 2 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. 9 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில், 279 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் இன்று களம் இறங்கினர். இந்திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் 279 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என கருதப்பட்டது.
ஆனால், மதிய உணவு இடைவேளை வரை முதல் செசனில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அஸ்வின், அக்சார் பட்டேல், உமேஷய் யாதவ், இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் மாறிமாறி ஓவர்கள் வீசியும் பலன் அளிக்கவில்லை.
நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை 35 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்துள்ளது. டாம் லாதம் 35 ரன்களுடனும், சோமர்வில் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 205 ரன்கள் தேவைப்படுகிறது.