ஒமிக்ரோன் என்ற வீரியம் கொண்ட கோவிட் வைரஸின் திரிபு நாட்டிற்குள் பரவ முடியும் என்பதால், நாட்டிற்குள் வரும் அனைவரையும் பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்த போது விசேட உரை ஒன்றை நிகழ்த்தி எதிர்க்கட்சித் தலைவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் இந்த வைரஸ் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இப்படியான நேரத்தில் மரபணு பரிசோதனை மற்றும் கண்காணிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குவது முக்கியம் என மருத்துவ துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
60 வயதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவது குறித்து அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.