ஒமிக்ரோனின் புதிய கொரோனா திரிபு இலங்கையில் பரவுவதை தவிர்க்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோனின் புதிய கொரோனா திரிபை கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் பிரித்தானியா, நெதர்லாந்து, கடனா உள்ளிட்ட பல நாடுகளிலும் இனங்காணப்பட்டுள்ளதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் புதிய திரிபு நாட்டில் பரவுவதை தவிர்க்க முடியாது எனவும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக வேண்டும் எனவும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிப்பதன் ஊடாகவும் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாகவுமே புதிய திரிபை கட்டுப்படுத்த முடியும் என அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதனால் இலங்கையில் புதிய திரிபுகள் குறித்த கற்கைகளையும் ஆய்வுகளையும் அதிகரிக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடவடிக்கை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டுள்ளமையினால் நாட்டிற்குள் இதுவரையில் நுழைந்திருக்காவிட்டாலும் இனிவரும் காலங்களில் நுழையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஒமிக்ரோன் தொற்று இலங்கைக்குள் நுழைவதற்கான பல வழிமுறைகள் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.