ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும். கடன் வாங்கி வட்டி கட்டி கஷ்டப்படுபவர்கள் ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிபருப்பு மாலைகட்டி, புனுகுசாற்றி, வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம் பெறலாம். சிம்மராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பானது.
திங்கட்கிழமை சிவனுக்கு பிரியமான வில்வத்தால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால், சிவனருள் கிடைக்கும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹரசதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர்அபிஷேகம் செய்து சந்தனக்காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டைமலர் சாற்றி வழிபட கண்நோய்கள் அகலும். கடக ராசிக்காரர்கள் இந்தக் கிழமைகளில் வழிபடலாம்.
எதிர்பாராதவிதமாக இழந்து விட்ட பொருளை திரும்ப பெற பைரவர் வழிபாடு பலன் தரும். செவ்வாய்க்கிழமை மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த பொருள் திரும்ப கிடைக்கும். செவ்வாய்க்கிழமை மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவரை வழிபட சிறந்த நாளாகும். எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வந்தால் சிறப்பு. குறைந்தது 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்ப்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப் பூவால் வழிபட்டால் நற்பலன்கள் வந்து சேரும்.
புதன்கிழமை நெய் தீபம் ஏற்றிவழிபட வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள் இது.
வியாழக்கிழமை பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம், காத்து, கருப்பு விலகி நலம் கிடைக்கும். தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட இந்தக்கிழமை சிறந்தது.
வெள்ளிக்கிழமை மாலையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய நீங்காத செல்வம் வந்து நிறையும். ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வழிபட ஏற்றநாளாகும்.
சனிபகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும். மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள்.