மிருகண்டு முனிவர் பல வருடங்கள் பிள்ளைக்காகத் தவமிருந்தார். அவர் முன்பாக தோன்றிய இறைவன், ‘உனக்கு 16 ஆண்டுகளே வாழக்கூடிய மதி நிறைந்த பிள்ளை வேண்டுமா?, 100 ஆண்டுகள் வாழக்கூடிய மதியற்ற பிள்ளை வேண்டுமா?’ என்று கேட்டார். மிருகண்டு முனிவர் 16 ஆண்டுகள் வாழக்கூடிய மதி நிறைந்த பிள்ளையை கேட்டுப் பெற்றார்.
அந்தப் பிள்ளையே மார்க்கண்டேயர். அவர் அனுதினமும் இறைவனை வேண்டி வழிபட்டு வந்தார். ஒரு முறை அவருக்கு தன்னுடைய 16 வயதில் இறப்பு நேரும் என்ற தகவல் தெரியவந்தது. இதையடுத்து மார்க்கண்டேயர் சிவ தல யாத்திரை புறப்பட்டார். ஒவ்வொரு ஆலயமாக வழிபட்டு விட்டு, இறுதியாக திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.
அங்கு இறைவனை நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தபோது, அவரது உயிரைப் பறிக்க எமதர்மன் வந்து சேர்ந்தான். இதையடுத்து மார்க்கண்டேயர், சிவலிங்கத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு சிவ நாமத்தை உச்சரித்தபடி இருந்தார். காலன், மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க பாசக்கயிறை வீசினான். அந்தக் கயிறு சிவலிங்கத்தின் மீதுபட்டு காயம் உண்டாக்கியது.
சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், தன்னுடைய காலால் காலனை எட்டி உதைத்து பாதாளத்தில் தள்ளினார். மேலும் மார்க்கண்டேயருக்கு, என்றும் 16 வயதில் இருக்கும் வரத்தினையும் வழங்கி அருள்புரிந்தார். இதனால் இத்தல இறைவன் ‘காலசம்ஹாரமூர்த்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.