இதுவரை நடைபெற்ற படுகொலைகள் பற்றி விசாரணை செய்யாமல், சர்வதேசத்தின் தலையீட்டை பெறாமல் நீதியை திசைதிருப்பப் பார்க்கும் அரசாங்கங்களா உண்மையான போர்க்குற்ற விசாரணைகளில் ஈடுபட முன்வரப் போகின்றன எனக் கேள்வியெழுப்பியுள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபையானது சர்வதேச நீதிபதிகளின் துணை கொண்டு உண்மையறியும் ஆணைக்குழு ஒன்றையோ, செயற்குழு ஒன்றையோ நியமிக்க முடியுமா என ஆராய்ந்து அதன்மூலம், இதுவரை நடைபெற்ற உண்மைகளை உலகுக்கு எடுத்துரைப்பதே ஒரே வழியென குறிப்பிட்டுள்ளார்.
மன்னாரில் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்ட வட்டக்கண்டல் படுகொலையின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நடந்தவற்றைக் கனவாக எண்ணுமாறு கருதவைக்க அரசாங்கம் கடினமாக உழைத்து வருகின்றதென குறிப்பிட்ட வடக்கு முதல்வர், அரசியல் ரீதியாக அதைத் தருவோம் இதைத் தருவோம் என பேரம் பேசுவதாகவும் இல்லையென்றால் மஹிந்த வந்து விடுவார் என பயம் காட்டப் பார்க்கின்றார்கள் எனவும் மேலும் குறிப்பிட்டார்.
இதனை விடுத்து, அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் மீது கரிசனை இருக்கின்றதென்றால் புனர்வாழ்வு முகாம்களை மூடுதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை வாபஸ் பெறுதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், இராணுவத்தை வெளியேற்றி காணிகளை மீள கையளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டுமென வடக்கு முதல்வர் மேலும் குறிப்பிட்டார்.
வெறும் கிணறுகள் வெட்டி, மலசலகூடம் மற்றும் வீடுகள் அமைத்து, தண்ணீர் தாங்கிகளைக் கட்டுவது போன்ற விடயங்கள் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் வழி வகுக்காதென குறிப்பிட்ட முதல்வர் விக்னேஸ்வரன், போர்க்குற்ற விசாரணை உரிய முறையில் சந்தேகங்களுக்கு இடமின்றி நடைபெற்று குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதே உறவுகளை இழந்தவர்கனின் மனதை சற்றேனும் ஆசுவாசப்படுத்தும் என மேலும் தெரிவித்தார்.