தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், ஆட்சியிலும், ஆளும் கட்சியிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் பல மாற்றங்களை மக்கள் விரும்பவில்லை.
சமீபத்திய தமிழக அரசியல் நடவடிக்கைகள் அதனை எடுத்த காட்டியிருக்கின்றன. குறிப்பாக ஆளும் கட்சியான அ.தி.மு.க வின் பொது செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டதனை பலரும் விரும்பவில்லை.
இதன் காரணமாக, அ.தி.மு.க கட்சியின் அடிநிலை தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரை நேரடி அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
தொண்டர்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட தீபாவும், கடந்த 17ஆம் திகதி தனது அரசியல் பிரவேசம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இது மன்னார்குடி தரப்புக்கு பெரும் பேரிடியாக அமைந்திருந்தது.
இந்நிலையில், தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக தீபா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 6ஆம் திகதி திருச்சியில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் தீபா, இதனை போல ஆறு நாட்களுக்கு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தவும் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புகளின் போது தீபாவின் ஆதரவாளர்கள் அவரின் தலைமையை ஏற்றுக்கொள்வது தொடர்பில் உறுதி மொழியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் போது தீபாவின் பாதுகாப்பு பணியில் அவரது தீவிர ஆதரவாளர்கள் 30 பேர் ஈடுபடுவார்கள் எனவும், தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜெயலலிதாவின் பிறந்தநாளான எதிர்வரும் 24ஆம் திகதி தனது புதிய அரசியல் கட்சி தொடர்பிலா அறிவிப்பை வெளியிடுவார் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இதேவேளை, தீபாவின் இந்த அரசியல் சுற்றுப்பயணம் தொடர்பான நடவடிக்கையின் காரணமாக மன்னார்குடி தரப்பு கலக்கத்தில் இருப்பதாக தமிழக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.