உலக டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெடரர், நடால் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முடிவுகள் அடிப்படையில் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவு தர வரிசையில், காயத்தில் இருந்து மீண்டு வந்து 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த 35 வயதான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (7,780 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 4-வது சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் (7,715) ஒரு இடம் சறுக்கி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கால்இறுதியில் தோல்வி கண்ட செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவா (5,270) 2 இடம் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் சுற்றில் தோல்வி கண்ட ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (5,073) 4-வது இடத்தில் நீடிக்கிறார்.
3-வது சுற்றில் தோல்வியை சந்தித்த சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவா (4,985) ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். 2-வது சுற்றில் தோல்வி கண்ட போலந்து வீராங்கனை அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (4,915) 3 இடங்கள் சரிந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா (4,720) 7-வது இடத்தில் நீடிக்கிறார். 4-வது சுற்றில் தோல்வி கண்ட ரஷிய வீராங்கனை குஸ்னெட்சோவா (3,915) 2 இடம் உயர்ந்து 8-வது இடத்தை சொந்தமாக்கினார். அமெரிக்க வீராங்கனை கெய் மேடிசன் (3,897) ஒரு இடம் சறுக்கி 9-வது இடம் பெற்றார். கால்இறுதியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா (3,705) ஒரு இடம் பின்னடைவை சந்தித்து 10-வது இடத்துக்கு சரிந்தார். இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 17-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு முன்னேறினார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில், 3-வது சுற்றில் தோல்வி கண்ட அமெரிக்காவின் மாடெக் சான்ட்ஸ் பெதானி (10,135) முதலிடத்தில் தொடருகிறார். 3-வது சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சானியா மிர்சா (6,525) 2-வது இடத்தில் இருந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். செக் குடியரசு வீராங்கனை சபரோவா (8,500) 6 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை தனதாக்கினார். சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் (5,490) 3 இடங்கள் சரிந்து 8-வது இடம் பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில், ஆஸ்திரேலிய ஓபனில் 4-வது சுற்றில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே (11,540) முதலிடத்திலும், 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட செர்பியா வீரர் ஜோகோவிச் (9,825) 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அரைஇறுதியை எட்டிய சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா (5,695) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். கால்இறுதியில் தோல்வி அடைந்த கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் (4,930) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளார். 4-வது சுற்றில் தோல்வியை சந்தித்த ஜப்பான் வீரர் நிஷிகோரி (4,830) 5-வது இடத்தில் நீடிக்கிறார்.
இறுதிப்போட்டியில் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (4,385) 3 இடம் ஏற்றம் கண்டு 6-வது இடத்தை பெற்றுள்ளார். குரோஷியா வீரர் மரின் சிலிச் (3,560), ஆஸ்திரியா வீரர் டோமினிச் (3,505) முறையே 7-வது, 8-வது இடத்தில் நீடிக்கின்றனர். பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் (3,445) 3 இடம் சறுக்கி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை உச்சி முகர்ந்த சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (3,260) 7 இடம் ஏற்றம் பெற்று 10-வது இடத்தை பிடித்துள்ளார். 4-வது சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரேவை வீழ்த்திய ஜெர்மனி வீரர் மிஸ்சா ஸ்வெரேவ் 15 இடம் முன்னேறி 35-வது இடத்தை பெற்றுள்ளார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரான்ஸ் வீரர் நிகோலஸ் மகுட் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 26-வது இடத்தில் நீடிக்கிறார். திவிஜ் சரண் 2 இடம் சரிந்து 60-வது இடத்தையும், புராவ்ராஜா ஒரு இடம் சறுக்கி 63-வது இடத்தையும், லியாண்டர் பெயஸ் ஒரு இடம் பின்னடைவை சந்தித்து 64-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.