வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை தொடர்பிலும், மீள்குடியேறவுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை தொடர்பிலும், மீள்குடியேறியுள் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பிலும் முதலமைச்சர் கூறிய தகவல்கள் என்ன அடிப்படையில் கூறப்பட்டது..? என வடமாகாண சபையின் 83 ஆம் அமர்வில் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பப்படவுள்ளது.
வடமாகாண சபையின் 83 ஆம் அமர்வு நாளை வடமாகாணசபையின் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதன்போதே மேற்படி கேள்வி மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினால் எழுப்பப்படவுள்ளது.
வடமாகாண முதலமைச்சர் தனியே தமிழ் மக்களுக்குரிய முதலமைச்சராக செயற்படுகின்றார். மற்றைய இன மக்களுக்கும் முதலமைச்சராக அவர் செயற்படவில்லை.
கடந்த வருடம் 2016 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற அமர்வுகளில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் 5 மாவட்டங்களிலும் மீள்குடியேறும் முஸ்லிம் மக்களுக்கு 2013ம் ஆண்டு தொடக்கம் காணிகள் வழங்கப்பட்டுள்ளமையினையும், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தினை வடமாகாணசபை வரவேற்பதனையும் முதலமைச்சர் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சரை நோக்கி கடந்த அமர்வுகளிலும் இந்த கேள்விகள் எழுப்பபட்டிருந்த நிலையில் முதலமைச்சர் சபையில் இல்லாமையினால் முதலமைச்சர் அதற்கு பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள அமர்வுகளில் முதலமைச்சர் கலந்துகொள்ளவுள்ள நிலையில் முதலமைச்சரை நோக்கி இந்த கேள்வி எழுப்பப்படவுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.