நியூசிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 3வது நடுவர் தனக்கு ‘அவுட்’ கொடுத்ததை கண்டு விராட் கோலி அதிர்ச்சியடைந்தார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என இந்தியாவிடம் ஒயிட் வாஷ் ஆனது.
இதைத்தொடர்ந்து கான்பூரில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது.
இரு அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று டிசம்பர் 3ம் திகதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் வெற்றிப்பெறும் முனைப்போடு இரு அணிகளும் களமிறங்கின.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
அதன் படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடிய இந்திய அணி, முதல் நாள் முடிவில் 4 விக்கெட இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.
கில் (44), புஜாரா (0), கோலி (0), ஸரேயாஸ் ஐயர் (18) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மயங்க அகர்வால் 120 ரன்களுடனும், சாஹா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். எனினும், கோலிக்கு ரிவ்யூவில் 3வது நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
29வது ஓவரை வீசிய அஜாஸ் பட்டேல், 2வது பந்தில் புஜாராவை டக் அவுட்டாக்கினார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய கோலி, அஜாஸ் பட்டேல் வீசிய 6வது பந்தை அடிக்க முயன்ற போது பந்து பேடில் பட்டது, இதனையடுத்து அஜாஸ் அவுட் என முறையிட களநடுவர் அனில் சவுத்ரி அவுட் கொடுத்தார்.
எனினும், சற்றும் யோசிக்காத கோலி, ரிவ்யூ கேட்டார். சம்பவத்தின் வீடியோவை டிவி மற்றும் 3வது நடுவர் வீரேந்திர சர்மா ஆய்வு செய்த போது, பந்து முதலில் பேட்டில் பட்டு பின்னர் பேட்டில் பட்டது போல் தெரிந்தது.
ஆனால், 3வது நடுவர் வீரேந்திர சர்மா அவுட் என கொடுத்தது கோலிக்கு அதிரச்சியாக அமைந்தது.
இதனையடுத்து, கடுப்பில் களநடுவரிடம் உரையாடிய கோலி, கொந்தளிப்புடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
பந்து முதலில் பேடில் பட்டு பின் பேட்டில் பட்ட பின்னர் மீண்டும் பேடில் பட்டது. அது அவுட் தான். நடுவர்கள் சரியான தீர்ப்பை தான் வழங்கினர் என நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.