இந்தியாவின் பீகார் மாநிலத்தில் காணாமல் போன தனது கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.25,000 பரிசு தருவதாக பெண் ஒருவர் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் வர்சாலிங்கச் பகுதியைச் சேர்ந்தவர் பபிதா தேவி. இவர் தனது வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக கிளி ஒன்றை ஆசையாக வளர்த்து வந்துள்ளார். குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் போன்றே அந்த கிளியை பார்த்து வந்துள்ளார் பபிதா தேவி. தினமும் காலையில் இவர்கள் குடும்ப உறுப்பினர்களை எழுப்பி விடுவதே கிளிதானாம்.
இந்தநிலையில் கடந்த 3ம் திகதி பாசமாக வளர்த்து வந்த கிளி காணாமல் போனதாக கூறப்படுகிறது. வீட்டில் ஒருவரைப் போல வளர்த்துவந்த கிளி காணாமல் போனது பபிதா தேவியை மனதளவில் பெரிய அளவில் பாதித்துள்ளது.
இதனால் பபிதா சரியாக உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்று அவரது குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த கிளியை கண்டுபிடிப்பதற்காக வாட்ஸ் அப் மூலம் பெரும் முயற்சி எடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனால், தனது கிளியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.25,000 பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார் பபிதா தேவி. மேலும் அதுகுறித்த அறிவிப்பினை அச்சிட்டு நோட்டீஸ் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு அவர் அளித்து வருகிறார்.