மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரதேசமான வாகரை ஓமடியாமடுவில் பன்சாலை ஒன்றில் இடம்பெற்ற யானைவெடி வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமுற்ற தேரர் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாகஸ்த்தன வெலிக்கந்தவைச் சேர்ந்த சிசிரகுமார (வயது – 27) என்ற இளைஞனே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி இ.சிகாப்தின் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தினை உடற் கூற்றாய்விற்காக சட்ட வைத்தியரின் அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லுமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், பின்னர் பலர் சத்தமிடும் சத்தம் கேட்டதாகவும், அருகில் இருந்தவரகள் கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.