நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு மின்சக்தி அமைச்சு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய மின்வெட்டு ஒரு நாசகார செயலால் ஏற்பட்டதாக வெளியான தகவல்களின் பின்னரே தாங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
மின் விநியோக பாதைகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று முற்பகல் 11.45 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் சுமார் 5 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
இதேவேளை, இச்சம்பவத்தைத் தொடர்ந்து நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்துள்ளன.
ஜெனரேட்டர்களில் ஒன்றை மீண்டும் இயக்கி, அதை தேசியக் கட்டமைப்பில் சேர்ப்ப எதிர்பார்ப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கு இரண்டு வாரங்கள் வரை ஆகும் என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எனவே, சுழற்சி முறையில் மின்சாரம் தடைப்படும். இதனடிப்படையில், எதிர்வரும் சில நாட்களுக்கு பல பிரதேசங்களுக்கு இடையிடையே மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம்.