தேசிய ஒற்றுமையை தொனிப் பொருளாகக் கொண்டு இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுதேச விவகார அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் 4ஆம் திகதி காலி முகத் திடலில் நாட்டின் 69ஆம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இதன்படி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாட்டின் அநேக மாவட்டங்களில் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச ரீதியில் உலகின் பல நாடுகளிலும் அமைந்துள்ள அந்தந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்கள் உயர்ஸ்தானிகராலயங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து அரச நிறுவனங்கள் திணைங்களங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிலும் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு சுற்று நிருபம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வுகளை பார்வையிட விரும்பும் மக்கள் எதிர்வரும் 4ம் திகதி காலை 8.00 மணிக்கு முன்னதாக லேக்ஹவுஸ் சுற்று வட்டத்தின் ஊடாக பழைய நாடாளுமன்றக் கட்டடம் வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய தேசிய ஒற்றுமையை தொனிப்பொருளாகக் கொண்டு இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் வஜிர அபேகுணவர்தன கூறியுள்ளார்.