சிலருக்கு முகத்திலும் கை மற்றும் கழுத்து பகுதிகளிலும் அடர்ந்த கருத்த நிற திட்டு திடீரென ஏற்படும். முகம் பல நிற வேறுபாடுகளுடன் காணப்படும். அதிக மெலானின் உற்பத்தியாகும் பொழுது பல இடங்களில் இந்த அடர் நிற திட்டு ஏற்படுகின்றது. அடர் ப்ரவுன் நிறம், லேசான ப்ரவுன் நிறம் முதல் கறுப்பு நிறம் வரை கோணல் மாணலாக இத்திட்டு படர்ந்து ஏற்படுகின்றது.
* சிலவகை சிறிய அளவுகளில் சூரிய ஒளி பாதிப்பின் காரணமாக ஏற்படலாம்.
* வயது கூடுவதன் காரணமாக ஏற்படலாம்.
* கர்ப்ப காலத்தில் ஏற்படலாம்.
* சிலருக்கு கருத்தடை மாத்திரைகள் காரணமாக ஏற்படலாம்.
* அடிபட்டு ஆறிய பின்பு அடர் திட்டு இருக்கலாம்.
நம் சருமம், தலைமுடி, கண் இவற்றிக்கு நிறம் கொடுக்கும். மெலனின் சில காரணங்கள் காரணமாக அதிகம் உருவாகுவது முகத்தில், கைகளில் அடர்திட்டினை ஏற்படுத்துகின்றது. முக்கிய காரணங்களாக வெயில், பரம்பரை, ஹார்மோன் பிரச்சினை, சரும காயங்கள் இவை குறிப்பிடப்படுகின்றன.
* அதிக நேரம் வெயிலை தவிர்த்தலும், சன் ஸ்கீரீன் பாதுகாப்பு லோஷன் உபயோகித்தலும் வேண்டும்.
* பருத்தி ஆடைகளும், உடலை மூடிய ஆடைகளும் வெய்யிலில் செல்லும் பொழுது பாதுகாப்பாய் அமையும்.
* ஹார்மோன் பாதிப்பினால் இந்த அடர் திட்டு பெண்களுக்கு அதிகம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. உதட்டுக்கு மேல் வரும் அடர் நிற திட்டு ஹார்மோன் பாதிப்பினால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மெலாஸ்மா எனும் ஹார்மோன் பாதிப்பினால் ஏற்படும் நிற மாற்றம் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படுவது சகஜம். பொதுவில் சற்றே மாநிறம், அடர்நிறம் கொண்டோருக்கு கூடுதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
* சில வகை நோய்களும் அடர்நிற திட்டினை கூட்டும். சில உணவுக் குழாய் பாதிப்பு நோய்கள், செயல்பாட்டு திறன் மாறுபடும் நோய்கள், வைட்டமின் குறைபாடுகள், புற்றுநோயின் தொடர் சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை காரணம், ஆன்டி பயாடிக், மலேரியா மருந்து, வலிப்பு நோய் மருந்துகள் போன்ற காரணங்களாலும் அடர் நிற திட்டு ஏற்படும்.
* தலைக்கு ஹென்னா, பச்சை குத்திக் கொள்ளுதல் இவற்றின் காரணமாக சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டு அடர் நிற திட்டு ஏற்படலாம்.
* சில ரசாயனங்களோடு வேலை செய்யும் நிலை ஏற்படும் பொழுது அதன் பாதிப்பாக அடர் நிறம் ஏற்படலாம்.
* எக்ஸிமா, பரு, சோரியாசிஸ் இவைகளின் பாதிப்பாலும் அடர் நிற பாதிப்பு ஏற்படலாம்.
இத்தகு பாதிப்புகளுக்கு சில சரும உருப்பு முறை கொண்டும், லேசர் சிகிச்சை மூலமும், சரும பூச்சுகள் மூலமும் சிகிச்சை பாதிப்பிற்கேற்ப அளிக்கப்படுகின்றது. சன் ஸ்கிரீன் பரிந்துரைக்கப்படுகின்றது.
மருத்துவ காரணங்களுக்கு அதற்கான சிகிச்சை முறையாய் பெறும் பொழுது நல்ல நிவாரணம் தெரியும். அநேக இயற்கை முறை வழிகளில் இந்த அடர் நிறத்தினை நீக்க முடிகின்றது.
* ஒரு சிறிய உருளை கிழங்கை நன்கு கழுவுங்கள். அதனை வெட்டிய பகுதியில் சில சொட்டு நீர் தடவுங்கள். பாதிக்கப்பட்ட இடத்தில் இதனை மென்மையாய் சில நிமிடங்கள் தடவுங்கள். பத்து நிமிடம் சென்று வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவி விடுங்கள். தினம் இருமுறை செய்த பிறகு நீங்களே பாருங்கள். உருளை கிழங்கிற்கு இந்த அடர் நிறத்தினை மாற்றும் சக்தி உண்டு.
* எலுமிச்சை சாறு சிறிது + தேன் சிறிது கலந்து பூசுங்கள். சருமத்தினை ஈரப்படுத்தி விட்டு செய்யுங்கள். 15 நிமிடங்கள் சென்று கழுவி விடுங்கள் சருமம் வெளுக்கும். மிருதுவாகும். வைட்டமின் ‘சி’ சத்து பெறும்.
* பப்பயா பழத்துண்டுகள் சிலவற்றினை மசித்து தடவுங்கள். பின் 20 நிமிடம் சென்று கழுவி விடுங்கள். பப்பாளிக்கு சரும அடர் திட்டினை நீக்கும் திறன் உண்டு.
* ஆப்பிள் ஜூஸ் 1 டீஸ்பூன் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சிறந்த பலன் கிடைக்கும்.
* 1 டீஸ்பூன் தயிருக்கும் இதே பலன் உண்டு.
உங்கள் முகம் உங்களுக்கு என்ன சொல்கின்றது.
* கண்ணிலும், சருமத்திலும் லேசான மஞ்சள் தெரிந்தாலே மஞ்சள் காமலை பரிசோதனையும் சிகிச்சையும் மிக அவசியம். உங்கள் கல்லீரல் பாதிப்பினை கவனத்தோடு கையாளுங்கள்.
* முகத்தில் உள்ள நிற மாறுதல்,சரும பாதிப்பு போன்றவை உடலில் ஏதோ பாதிப்பு இருப்பதனை அறிகுறியாய் காட்டும். இந்த நிற மாறுதல் இரு பக்க கன்னத்திலும் பட்டாம்பூச்சி போல் படர்ந்து இருந்தால் நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
* பெண்களுக்கு மிக அதிகமான முடி தாடை, மேல் உதட்டில் இருந்தால் ஹார்மோன் மாறுபாடு இருப்பதனை காட்டும். மாத விலக்கு நின்ற பெண்களுக்கும் இத்தகு பாதிப்பு ஏற்படக்கூடும். இதற்கு கண்டிப்பாய் மருத்துவ பரிசோதனை அவசியம்.
* மிகவும் வெளிறிப் போன முகமாக இருந்தால் இரும்பு சத்து குறைபாடு ரத்த சோகை இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மூச்சு வாங்குதல், தலைவலி, கைகால் சில்லிட்டு இருத்தல், எளிதில் உடையும் நகம் இவைகளும் அறிகுறிகளாய் தெரியும்.
* வறண்ட சரும் என்பது பனி, வறண்ட காற்று இவற்றினால் ஏற்படலாம். வறண்ட உதடுகளும் உடலில் நீர் சத்து குறைபாட்டின் காரணமாக இருக்கலாம். உடலுக்கு தேவையான நீர் தேவை. மேலும் தைராய்டு குறைபாடு இருக்கின்றதா வைட்டமின் பி சத்து குறைபாடு இருக்கின்றதா எனவும் பரிசோதித்துக் கொள்ளவும்.
* கருப்பை, சினைப்பை பாதிப்பு உடையவர்களுக்கு ப்ரவுன், கறுப்பு திட்டுகள், கழுத்து, நெற்றி, கை உள் மடிப்பு, மார்பகம் சுற்றி ஏற்படலாம். மருத்துவ உதவி அவசியம்.
* மஞ்சள் தூளும் எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் மற்றும் பாதிப்பு உள்ள இடத்தில் நன்கு தடவ வேண்டும். 20 நிமிடம் பொறுத்து நன்கு கழுவி விடலாம். மஞ்சள் சருமத்தினை சீராய் வைக்கவும், வளமாய் வைக்கவும் உதவும்.
* ஆப்பிள் சிடார் வினிகர்- இது தரமானதாக இருக்க வேண்டும் என்பதனை உணருங்கள்.
இந்த ஆப்பிள் சிடார் வினிகர் சிறிதளவுடன் சிறிது நீர் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 5 நிமிடங்கள் சென்று கழுவி விடலாம்.
* சிகப்பு பெரிய வெங்காயத்தினை தோல் நீக்கி இரண்டாய் வெட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் சென்று கழுவி விடவும். வெங்காயம் அடர் நிறத்தினை நீக்குவதில் சிறந்தது.
* சோற்றுக் கற்றாழை இரண்டு ஸ்பூன் அளவு இதன் சதை பற்றினை எடுத்து சிறிதளவு தேனும் கலந்து பாதிப்புள்ள இடத்தில் தடவி 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். வெயில் பாதிப்பு எளிதில் நீங்கும்.
* வெள்ளரிக்காய் ஜூஸ் + தேன் + எலுமிச்சை சாறு சம அளவு கலந்து பாதிப்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் சென்று கழுவலாம். வெள்ளரிக்காய்க்கு சருமத்தினை புதுப்பிக்கும் திறன் உண்டு.
* சந்தன பொடி + பன்னீர் இரண்டும் கலந்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் சென்று வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். சந்தனம் ரத்தத்தினை சுத்தம் செய்ய வல்லது. சன் ஸ்கிரீன் போல் வேலை செய்யும்.
* தக்காளி சாறு + ஓட்ஸ் பொடி + 1/2 டீஸ்பூன் தயிர் கலந்து பாதிப்புள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் சென்று வெதுவெதுப்பான நீரால் கழுவி விடுங்கள். தினமும் செய்ய சீக்கிரம் பலன் கிடைத்து விடும்.
எலுமிச்சை
எலுமிச்சையை ராஜகனி என்று முன்னோர்கள் குறிப்பிட்டார்கள். யாரேனும் பெரியவர்களை பார்க்கச் சென்றால் எலுமிச்சை பழம் எடுத்துச் சென்றார்கள். அப்படியென்ன இந்த எலுமிச்சையில் இருக்கின்றது? இன்றைய மருத்துவ ஆய்வு இதற்கு பதில் சொல்கின்றது.
* வைட்டமின் ‘சி’ சத்தின் உரிமையாளர்
* எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து குடிக்க அமிலத்தன்மை நீங்குகின்றது.
* உடலின் சர்க்கரை அளவினை சீர்படுத்துவதில் இதன் பங்கும் உள்ளது.
* இது மூளையின் உணர்வு, மூளை புத்துணர்ச்சி பெறுகின்றது.
* முறையான அளவில் உட்கொள்ளும் பொழுது சளி கூட கரைகின்றது.
* புற்று நோய் செல்களை எதிர்க்கின்றது.
* இருதய பாதுகாப்பு உணவு.
* நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க வல்லது.
* வைட்டமின் ‘சி’ குறைப்பாட்டால் ஏற்படும் ஸ்கர்வி எனப்படும் நோய் தவிர்க்கப்படும்.
* சீரண சக்தி கூடும்.
* எடை குறையும்.
* உடலின் செயல் பாட்டுத்திறன் கூடும்.
* உடலின் நீர் சத்து நன்கு காக்கப்படும்.
* ரத்தக் கொதிப்பு கட்டுப்படும்.
* கண்டிப்பாய் ‘ஸ்ட்ரெஸ்’ பாதிப்பு குறையும்.
* யூரிக் ஆசிட் அளவு மட்டுப்படுவதாகக் கூறப்படுகின்றது.
* சிறு நீரக கல் பாதிப்பு வெகுவாய் கட்டுப்படும்.
* ரத்தம் சுத்தமாகும்.
* சிறிது நீருடன் சில துளி எலுமிச்சை சாறு கலந்து வாரம் இருமுறை முகத்தில் தடவ வெயிலால் கறுத்த முகம் பளிச்சிடும்.
* உங்கள் கல்லீரல் வெகுவாய் பாதுகாக்கப்படும்.